பதவியேற்பு விழாவால் பற்றி எரியும் மணிப்பூர்; துணை முதலமைச்சர் நியமனத்திற்கு எதிராகக் கடும் வன்முறை
செய்தி முன்னோட்டம்
மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு, பிப்ரவரி 4, 2026 அன்று புதிய அமைச்சரவை பதவியேற்றது. பாஜக தலைமையிலான இந்த அரசில் குகி சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென் மற்றும் நாகா சமூகத்தைச் சேர்ந்த லோசி டிக்ஹோ ஆகியோர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், இந்த நியமனத்தை ஏற்க மறுத்த குகி சமூக மக்கள் மற்றும் சில சிவில் அமைப்புகள், சுராசந்த்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை கடும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
பின்னணி
போராட்டத்தின் பின்னணி மற்றும் கல்வீச்சு
சுராசந்த்பூரில் உள்ள துய்பாங் பஜார் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள், குகி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ நெம்சா கிப்ஜென் அமைச்சரவையில் இணைந்ததைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சாலையில் டயர்களைக் கொளுத்திப் போட்டதுடன், போக்குவரத்தையும் முடக்கினர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் கூட்டத்தைக் கலைக்க முயன்றபோது, போராட்டக்காரர்கள் அவர்கள் மீது கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். பாதுகாப்புப் படையினரை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனது.
நடவடிக்கை
பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை
கல்வீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்து, கூட்டத்தைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர். இதில் இரண்டு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க, அப்பகுதியில் கூடுதல் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குகி சமூகத்தினருக்கான தனி நிர்வாகக் கோரிக்கை நிறைவேறாத நிலையில், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றது துரோகம் எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இனக்கலவரம்
இனக்கலவரமும் தற்போதைய சூழலும்
மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் இனக்கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு யும்நாம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இந்தப் புதிய வன்முறை அமைதித் திரும்பும் முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சுராசந்த்பூர் உள்ளிட்ட மலை மாவட்டங்களில் இன்று முழு அடைப்பிற்குப் பல அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால், கடைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.