LOADING...
இளம் பெண்கள் இரவில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாதா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்தால் சர்ச்சை
பெண்கள் குறித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்தால் சர்ச்சை

இளம் பெண்கள் இரவில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாதா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்தால் சர்ச்சை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2025
03:11 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 23 வயது மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பின்னர் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். இந்த சம்பவத்தை அதிர்ச்சி என்றும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை பின்பற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டாலும், சர்ச்சைக்குரிய வகையில், இளம் பெண்கள் (Girls) இரவில் வெளியே வர அனுமதிக்கப்படக் கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்தச் சம்பவத்திற்கான பொறுப்பிலிருந்து தனது அரசாங்கத்தை விடுவித்து பேசிய மம்தா பானர்ஜி, மாணவியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தனியார் மருத்துவக் கல்லூரியின் பொறுப்பு என்று வாதிட்டார்.

ஒடிசா

ஒடிசா சம்பவத்தை சுட்டிக்காட்டி பேச்சு

மேலும், ஒடிசாவின் பூரி கடற்கரையில் சமீபத்தில் நடந்த மற்றொரு கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவத்தை சுட்டிக்காட்டி, இதுபோன்ற குற்றங்கள் நடக்கும்போது ஏன் தனது நிர்வாகம் மட்டும் தனியாகக் குறிவைக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை (அக்டோபர் 10) மருத்துவமனை வளாகத்திற்கு அருகிலுள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் நடந்தது. ஒடிசாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளில் நம்பிக்கை இழந்த அவரது தந்தை, தனது மகளைத் தொடர்ந்து படிக்க ஒடிசாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். "மகள் வங்காளத்தில் இருக்க நாங்கள் விரும்பவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

கைது

சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது

இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட ஸ்கே ரியாஸ் உதின், ஸ்கே ஃபிர்தௌஸ் மற்றும் அப்பு மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். மொபைல் போன் டவர் தரவுகளைப் பயன்படுத்தி கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவி தனது தோழியுடன் வெளியே சென்ற நிலையில், அந்த தோழியின் பங்கு குறித்தும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.