LOADING...
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடக்கம்; அண்ணா பிறந்த நாளில் கொடி அறிமுகம்
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடக்கம்

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடக்கம்; அண்ணா பிறந்த நாளில் கொடி அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 15, 2025
08:37 pm

செய்தி முன்னோட்டம்

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் கொடியை அறிமுகம் செய்தார். கட்சியின் பெயர் வரும் நவம்பர் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னாள் மதிமுக துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யாவுக்கும், கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் மாதம் மல்லை சத்யா கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

கொடி

கொடி விபரம்

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்சியின் கொடி, 75% சிவப்பு மற்றும் 25% கருப்பு நிறங்களால் ஆனது. கொடியின் வலதுபுறத்தில் ஏழு நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. புதிய கட்சி தொடங்குவதற்கென, மதிமுகவிலிருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புலவர் சே.செவிந்தியப்பன், செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த புதிய கட்சி தொடக்கமானது, திருச்சியில் மதிமுக சார்பில் கொண்டாடப்படும் அண்ணாவின் பிறந்தநாள் மாநாட்டிற்கு மத்தியில் நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் வைகோ மற்றும் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வு, மதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் ஒரு புதிய அரசியல் வடிவத்தைப் பெற்றுள்ளதைக் காட்டுகிறது.