இனி கட்டாய மதமாற்றத்திற்கு செக்! மகாராஷ்டிராவில் புதிய சட்டம் நிறைவேற்றம்
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில், மிரட்டல், ஆசை வார்த்தை அல்லது திருமணத்தின் பெயரால் செய்யப்படும் மதமாற்றங்களை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'மத சுதந்திர மசோதா 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்தச் சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. இது குறித்து பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒடிசா, குஜராத், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கனவே இதே போன்ற சட்டங்களை இயற்றியுள்ளன என்று குறிப்பிட்டார்.
தண்டனைகள்
சட்டத்தின் கடுமையான தண்டனைகள்
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. திருமணத்தின் பெயரால் மதமாற்றம்: திருமணத்திற்காக சட்டவிரோதமாக ஒருவரை மதமாற்றம் செய்தால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினர்: மைனர்கள், பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினரை மதமாற்றம் செய்தால், 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். கூட்டு மதமாற்றம்: ஒரே நேரத்தில் பலரை மதமாற்றம் செய்தால் 7 ஆண்டுகள் சிறையும், மீண்டும் இதே குற்றத்தைச் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
நடைமுறை
முக்கிய நடைமுறைகள்
மதமாற்றம் செய்ய விரும்புபவர்கள் 60 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், மதமாற்றம் செய்த 21 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்க தவறினால், அந்த மதமாற்றம் செல்லாததாகக் கருதப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்து
இந்த சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் எதிரானது அல்ல என்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டப்பேரவையில் விளக்கமளித்தார். "அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு வழங்கும் மத சுதந்திரத்தை இந்த மசோதா கட்டுப்படுத்தாது. ஒருவரை ஏமாற்றி மதமாற்றம் செய்வது மத சுதந்திரத்திற்குள் வராது," என அவர் குறிப்பிட்டார். இந்த மசோதாவிற்கு சிவசேனா (யுபிடி) கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல்களைத் தடுக்க இது அவசியம் என அக்கட்சியின் எம்.எல்.ஏ பாஸ்கர் ஜாதவ் கூறினார்.