மதுரை மாரத்தான் போட்டி - திடீரென உயிரிழந்த கல்லூரி மாணவர்
மதுரையில் சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் சிறிதுநேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட மக்கள் நல்வாழ்வு-சுகாதாரத்துறைத்துறை சார்பில் 'உதிரம் 2023'என்னும் தலைப்பில் ரத்தத்தானம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மூர்த்தி ஆகியோர் இணைந்து துவக்கிவைத்தனர். இந்தப்போட்டியில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிருந்தும் 4,000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதன்படி இப்போட்டியில் திருப்பரங்குன்றம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் தினேஷ்குமார் என்னும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஆர்வமுடன் கலந்துகொண்டுள்ளார். அதன்படி, இந்த போட்டியினை முடித்த பிறகு தனது கல்லூரி விடுதிக்கு சென்ற மாணவர் தினேஷ்குமாருக்கு வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது.
கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணம்
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவனின் நண்பர்கள் அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிரச்சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நினைவு தப்பியநிலையில் இருந்த தினேஷ்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல், "இன்று(ஜூலை.,23)காலை மாரத்தான் போட்டியினை முடித்த தினேஷ்குமார் அடுத்த 1 மணிநேரம் மிக இயல்பாகவே இருந்துள்ளார். அதன் பின்னர் வலிப்பு ஏற்பட்டு காலை 8.45 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று கூறியுள்ளார். மேலும் அவருக்கு இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறைவாக இருந்த நிலையில் சுயநினைவும் திரும்பவில்லை என்றும், திடீரென 10.10க்கு கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டு 10.45க்கு அவரது உயிர் பிரிந்தது என்றும் ரத்னவேல் விளக்கம் அளித்துள்ளார்.