
அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை
செய்தி முன்னோட்டம்
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் மதுரை மாநகரில் மிக பிரம்மாண்டமாக, வரும் 20ம்தேதி நடக்கவிருக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கான பணிகள் மிகமும்முரமாக நடந்து வருகிறது.
மதுரை வலையன்குளம் பகுதியில் 65ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனிடையே இம்மாநாட்டிற்கு தடைவிதிக்க வேண்டுமென, சிவகங்கை மாவட்டத்தினை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், மாநாட்டிற்கு அதிகப்பேர் வருகைத்தருவார்கள் என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.
இதற்கான உரிய அனுமதி சான்றிதழினையும் அதிமுக விமானநிலைய அதிகாரிகளிடம் பெறவில்லை.
அதிகக்கூட்டம் காரணமாக விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும், விமானநிலையம் அருகே மாநாடு நடப்பதால் பட்டாசு போன்றவற்றால் ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மாநாடு
மாநாடு நடத்த தடையில்லை
எனவே, இந்த மாநாட்டிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று(ஆகஸ்ட்.,18) நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் உள்ளிட்டோர் முன்னிலையில் வந்தது.
அப்போது விசாரணை நடத்திய நீதிபதிகள், மாநாடு அறிவிப்பு வெளியாகி 4 மாதங்கள் ஆன நிலையில் கடைசி நேரத்தில் தடை கோரினால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பினர்.
இது விளம்பர நோக்கத்தோடு தொடுக்கப்பட்ட வழக்கா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சேதுமுத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்தனர்.
மேலும் மாநாடு நடத்த தடையில்லை என்று கூறி உத்தரவு பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.