Loading...
மதுரையில் 26 ஆண்டுகளில் இல்லாத புதிய வெயில் சாதனை; 108.5 டிகிரி தகிக்கும் வெப்பம்
மதுரை உலக அளவில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது

மதுரையில் 26 ஆண்டுகளில் இல்லாத புதிய வெயில் சாதனை; 108.5 டிகிரி தகிக்கும் வெப்பம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2026
02:10 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் கலாச்சார தலைநகரமான மதுரை மாநகரம், அண்மையில் உலக அளவில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்து சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வில், உலக அளவில் மிக கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ளும் 14 இந்திய நகரங்களின் பட்டியலில் மதுரை 7-வது இடத்தை பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மற்றும் மே மாத கோடை காலத்திற்கு பிறகு, ஜூன் மாத தென்மேற்கு பருவமழை காரணமாக மதுரையில் வெப்பம் தணிய தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதம் பாதியை கடந்தும் வெயிலின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சாதனை

26 ஆண்டுகால சாதனையை முறியடித்த வெப்பம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவாக மிக அதிகபட்சமாக 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி ஒட்டுமொத்த நகரவாசிகளையும் வறுத்தெடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்றும் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

ஜூலை மாதத்தில் மதுரையில் இவ்வாறு வெயில் கொளுத்துவது இது முதல் முறையல்ல என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளின் புள்ளிவிவரங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன:

2019: 106.1 டிகிரி பாரன்ஹீட்

2023: 107 டிகிரி பாரன்ஹீட்

2025: 106.7 டிகிரி பாரன்ஹீட்

2026 (தற்போது): 108.5 டிகிரி பாரன்ஹீட்

விளக்கம்

வானிலை மையத்தின் விளக்கம்

பருவமழை காலத்திலும் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருவது மதுரையின் தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தைக் காட்டுகிறது.

வழக்கமான பருவமழைக் காற்று வராமல் தடையின்றி வீசும் வறண்ட நிலக்காற்று மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் இந்த அசாதாரண வெப்பநிலை பதிவாகி வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

இந்தத் தகிக்கும் சூரிய வெப்பத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், வெப்பம் எப்போது தணியும் என்ற எதிர்பார்ப்புடனும் மதுரை மக்கள் மழையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT