நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
தமிழ்நாட்டுக்கு மத்திய பிரேதேசத்தில் இருந்து பெண் ஒருவர் பாதுகாப்பிற்காக வந்து தஞ்சம் அடைந்துள்ளார். அவரது வளர்ப்பு தாய் அவரை நரபலி கொடுக்கப்போவதாக கூறியதால் அவர் தப்பித்து இங்கு வந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா முதுகலை பட்டதாரி ஆவார். இவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பினை சேர்ந்த எனது வளர்ப்பு தாய் சுதா ஷர்மா மாந்திரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
போலீஸ் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல்
மேலும் அந்த மனுவில் அவர், தனது வளர்ப்பு தாய் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் என்பதால் போலீசில் புகாரளிக்க தைரியமில்லை. நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமுர்த்தி என்னும் நண்பர் உதவியோடு பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை குடும்பத்தினரும் ஏ.பி.வி.பி. அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்து சென்று விடுவார்களோ என்று அச்சப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அங்கு சென்றுவிட்டால் நிச்சயம் தன்னை நரபலி கொடுத்துவிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.