LOADING...
லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; 15 மாணவர்கள் பரிதாப பலி
ஏசி டக்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது

லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; 15 மாணவர்கள் பரிதாப பலி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 23, 2026
06:43 am

செய்தி முன்னோட்டம்

உத்தரப் பிரதேசம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 12 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஒரு செல்லப்பிராணி கடையும், மேல் தளங்களில் அனிமேஷன் பயிற்சி மையமும் இயங்கி வந்தன. மதியம் 3 மணியளவில் ஏசி டக்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நச்சுப் புகை வேகமாகப் பரவியதால், கட்டிடத்தின் உள்ளே இருந்த 20 முதல் 24 வயதுடைய மாணவர்கள் வெளியேற முடியாமல் கழிவறைகளிலும், பின் பக்கப் பகுதியிலும் தஞ்சமடைந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

கைது

கட்டிட உரிமையாளர்கள் உட்பட நால்வர் கைது

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிடத்தின் கூட்டு உரிமையாளர்களான ராம்கிருஷ்ணா உபாத்யாய், வீரேந்திர பிரசாத் சுக்லா, துஷார் கிருஷ்ணா ஜெய்ஸ்வால் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். குடியிருப்புப் பகுதியாக அனுமதி பெறப்பட்ட கட்டிடத்தை, எவ்வித தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தியதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 14 தீயணைப்பு வாகனங்கள், NDRF மற்றும் STRF குழுவினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கட்டிடத்தின் சுவர்களில் துளையிட்டும், அண்டை கட்டிடங்களின் மொட்டை மாடி வழியாகவும் மீட்புப் படையினர் உள்ளே நுழைந்து காயமடைந்த மாணவர்களை மீட்டனர்.

Advertisement