LOADING...
திருநெல்வேலியில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: அல்வா உற்பத்தி நிறுத்தம் - கடைகள் மூடல்!
திருநெல்வேலியில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் அல்வா உற்பத்தி முடக்கம்

திருநெல்வேலியில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: அல்வா உற்பத்தி நிறுத்தம் - கடைகள் மூடல்!

எழுதியவர் Vasuki Ravichandran
Mar 25, 2026
06:41 pm

செய்தி முன்னோட்டம்

உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி அல்வாவிற்கே தற்போது தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, நாடு முழுவதும் சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலியில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த எரிவாயு தட்டுப்பாடு காரணமாகத் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள சிறிய உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வடை உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் சாலையோரத் தள்ளுவண்டி கடைகளின் வணிகம் முற்றிலும் முடங்கியுள்ளது.

உற்பத்தியாளர்கள் சந்திக்கும் சவால்கள்:

விற்பனை முடக்கம்:

எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியாமல் நெல்லை வியாபாரிகள் தவித்து வருகின்றனர். திருநெல்வேலி சந்திப்பிலுள்ள பிரபல இனிப்பு கடைகளில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அல்வா உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள அல்வா மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், உற்பத்தி நிறுத்தப்பட்டால் ஓரிரு நாட்களில் அல்வா கிடைக்காத சூழல் உருவாகும் என்றும் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது நிலவி வரும் இந்த எரிசக்தி நெருக்கடி, நெல்லையின் அடையாளமான அல்வா வணிகத்தை நேரடியாகப் பாதித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கால அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு எரிவாயு விநியோகத்தைச் சீர்செய்ய வேண்டும் என்பதே வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement