Loading...
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 13, 2026
03:16 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராகப் பணியாற்றி வரும் லயோலா மணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ பணி நியமன ஆணையை, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் தலைமை செயலகத்தில் நேரில் வழங்கினார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, லயோலா மணி இப்பொறுப்பில் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.

அங்கீகாரம்

கட்சிப் பணிக்கான முக்கிய அங்கீகாரம்

பல்வேறு தொலைக்காட்சி விவாத மேடைகளில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளையும் கருத்துகளையும் தீவிரமாக முன்வைத்து வந்தவர் லயோலா மணி.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவருக்கு முக்கிய அரசுப் பொறுப்பு வழங்கப்படும் என அக்கட்சி சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வாக்குறுதியின் அடிப்படையில், தற்போது கல்வித்துறையின் மிக முக்கிய அங்கமாகக் கருதப்படும் பாடநூல் கழகத்தின் தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாடநூல் கழகம்

வரலாற்றுப் பின்னணியும் பாடநூல் கழகத்தின் பணிகளும்

கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்குத் தேவையான பாடப்புத்தகங்களைத் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் விநியோகம் செய்தல் ஆகிய முக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பின்னர் 1993 ஆம் ஆண்டில், சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் இது தமிழ்நாடு பாடநூல் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

முன்னதாக, திமுக ஆட்சிக்காலத்தில் திண்டுக்கல் ஐ. லியோனி இந்தப் பதவியில் இருந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின் தற்போது லயோலா மணி அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

ADVERTISEMENT

கல்வித்துறை

கல்வித்துறை முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்பு

முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து நியமன ஆணையைப் பெற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய லயோலா மணி, தமிழகக் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும் தனது முழு அர்ப்பணிப்புடன் செயல்படப் போவதாக உறுதி அளித்தார்.

தமிழக அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறையில் நிருவாக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நியமனம், தற்பொழுது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT