மகாபலிபுரம் கடற்கரை கோயிலில் மின்னொளி - தொல்லியல்துறை அறிவிப்பு
மகாபலிபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களை கண்டுகளிக்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலாத்தளத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரான ஷீ ஜின்பிங் ஆகியோர் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, ஒளி உமிழ்வு குறைவான விளக்குகள் கொண்டு அப்பகுதி அலங்கரிக்கப்பட்டது. ஒளி வெளிச்சத்தில் மிளிர்ந்த பாரம்பரிய சிற்பங்களை காண பார்வையாளருக்கான நேரமானது இரவு 9 மணிவரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் மழைநீர் காரணமாக அந்த விளக்குகள் பழுதாகியது.
14 பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்க தொல்லியல்துறை உத்தரவு
அதனைத்தொடர்ந்து கொரோனா காலம் முடிந்தப்பிறகு பயணியர்களை மீண்டும் இரவில் அனுமதிக்கலாம் என்று எண்ணிய தொல்லியல்துறை தரைமட்டத்திற்குமேல் மின்விளக்குகளை அமைத்தனர். அதுவும் பயன்படுத்தப்படாமல் போகவே, பழுதானது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஜி20 அமைப்பிலுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள், மகாபலிபுரம் வருகை தந்தப்பொழுது மீண்டும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, இரவில் சிற்பங்களும், கோயிலும் மின்னொளியில் மிளிர்ந்தது. ஆனால், அப்பொழுது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது தஞ்சாவூர் பிரகஸ்தீஸ்வரர் கோயில் அருகேயுள்ள சிவகங்கை பூங்கா, கடற்கரைக்கோயில், கங்கைக்கொண்ட சோழபுரம், பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 14 பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளை இரவு 9 மணிவரை அனுமதிக்க தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 15ம்தேதி முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி நேரமானது நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.