Page Loader
IIT வாய்ப்பை உதறித்தள்ளி சுயதொழில் தொடங்கிய பொறியாளர், பாஸ்கர் சுப்பிரமணியம்.. யார் இவர்?
அமாகி லேப்ஸ் நிறுவனர் பாஸ்கர் சுப்பிரமணியம்

IIT வாய்ப்பை உதறித்தள்ளி சுயதொழில் தொடங்கிய பொறியாளர், பாஸ்கர் சுப்பிரமணியம்.. யார் இவர்?

எழுதியவர் Prasanna Venkatesh
May 28, 2023
10:54 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவிலுள்ள ஐஐடி நிறுவனங்களில் நுழைய வேண்டும் பல இந்திய மாணவர்களுடைய கனவு. அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதனை வேண்டாம் என யாராவது தூக்கி எறிவார்களா? ஆனால், பாஸ்கர் சுப்பிரமணியம் அப்படியான ஒரு முடிவையே எடுத்தார். ஐஐடி பாம்பேயில் இடம் கிடைத்தும், அந்த சூழ்நிலை தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி அதனை விடுத்து வெளியே வந்து சொந்தமாக ஒரு நிறுவனத்தை உருவாக்கினார் பாஸ்கர். மிடில்-கிளாஸ் குடும்பத்தில் பிறந்த பாஸ்கருக்கு மைக்ரோசாஃப்டின் நிறுவனர் பில்கேட்ஸ் தான் கனவு நாயகன். சொந்தமாக கணினி கூட வாங்க முடியாத பாஸ்கர், தன்னுடைய பள்ளியின் கணினி அறையில் தான் கோடிங்கை கற்றுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய முதல் மென்பொருளை விற்பனை செய்த போது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் அவர்.

இந்தியா

கடந்த வந்த பாதை: 

கோயம்புத்தூர் GCT கல்லூரியில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார் பாஸ்கர். அதன் பிறகு பாம்பே ஐஐடியில் இடம் கிடைத்தும், அதனை உதறிவிட்டு, 2000-ம் ஆண்டு இம்பஸ்ல்சஃர்ட் என்ற தன்னுடைய இரண்டாவது வணிகத்தை தொடங்கியிருக்கிறார். 2002-ல் ஆடியோ ஹெட்செட்கள் மற்றும் 2004-ல் முதல் ப்ளூடூத் வாட்சையும் உருவாக்கியிருக்கிறார் பாஸ்கர். SiRF தொழில்நுட்ப நிறுவனம் அவருடைய வணிகத்தை 2005-ம் ஆண்டு வாங்கியிருக்கிறது. 2008-ம் ஆண்டு தன்னுடைய இரு நண்பர்களுடன் இணைந்து அமாகி மீடியா லேப்ஸ் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் இந்திய மதிப்பில் ரூ.11,500 கோடி மதிப்பீட்டில் ரூ.800 கோடியைத் திரட்டியிருக்கிறது அந்நிறுவனம். இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட விளம்பரத்தை வழங்கும் SaaS சேவையை வழங்கி வருகிறது அமாகி லேப்ஸ்.