LOADING...
வாடிக்கையாளரின் தனிமனித உரிமையை மீறிய லீலா பேலஸ் ஹோட்டல்: இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

வாடிக்கையாளரின் தனிமனித உரிமையை மீறிய லீலா பேலஸ் ஹோட்டல்: இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2026
01:35 pm

செய்தி முன்னோட்டம்

உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற 'லீலா பேலஸ்' நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளரின் தனிமனித சுதந்திரம் மற்றும் அந்தரங்கத்தை மீறியதற்காக, அந்த ஹோட்டலுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், கடந்த ஜனவரி 2025-ல் தனது கணவருடன் உதய்பூர் லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, தம்பதியினர் அறையில் இருந்தபோது, ஹவுஸ் கீப்பிங் ஊழியர் ஒருவர் மாஸ்டர் கீ-யை (Master Key) பயன்படுத்தி அனுமதியின்றி அறைக்குள் நுழைந்துள்ளார். தம்பதியினர் "சேவை வேண்டாம்" என்று சத்தமிட்ட பிறகும், அந்த ஊழியர் உள்ளே நுழைந்து அவர்களின் அந்தரங்கத்தில் தலையிட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

உரிமை மீறல்

தனிமனித உரிமை மீறல் என தீர்ப்பு 

இந்த வழக்கை விசாரித்த சென்னை (வடக்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், ஹோட்டல் நிர்வாகத்தின் இந்தச் செயல் 'சேவைக் குறைபாடு' மற்றும் 'தனிமனித உரிமை மீறல்' என்று உறுதி செய்தது. ஹோட்டல் தரப்பில், இது தங்களின் வழக்கமான நடைமுறை (SOP) என்று வாதிடப்பட்டது. ஆனால், ஹோட்டலின் உட்புற விதிமுறைகள் ஒரு வாடிக்கையாளரின் அடிப்படை உரிமையை விட மேலானது அல்ல என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தம்பதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவர்கள் தங்குவதற்காகச் செலுத்திய 55,500 ரூபாய் கட்டணத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்குச் செலவாக 10,000 ரூபாயையும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement