12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு எப்படி நடக்க போகிறது, தெரிந்து கொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களைத் திருத்தி, புதுப்பிக்கும் பணியின் இரண்டாம் கட்டத்தை (Special Intensive Revision - SIR) எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்த விரிவான அறிக்கையைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்தப் பணி பிப்ரவரி 2026க்குள் நிறைவு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை ஒவ்வொரு வாக்காளரும் சரிபார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பின் படி, வாக்காளர் பட்டியலானது இன்று (28.10.2025) நள்ளிரவு 12 மணியுடன் முடக்கப்படும்.
நடைமுறை
SIR-இன் முக்கிய நடைமுறை அம்சங்கள்
வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் இந்த சிறப்புத் திருத்தம், 'மக்கள் மையப்படுத்தப்பட்ட' விரிவான செயல்முறையாக இருக்கும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த பணியின் முக்கிய நடைமுறை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers - BLOs) கையில் உள்ளது. ஒவ்வொரு BLO-வும், ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
பணிகள்
BLOs-இன் பணிகள்
புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கான படிவம் 6 (Form 6) மற்றும் அறிவிப்புப் படிவங்களைச் சேகரிப்பது. வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து, வாக்காளர்களுக்கு நிரப்புவதற்கான படிவங்களை அளித்து, அவர்களுக்கு உதவுவது. சேகரிக்கப்பட்ட படிவங்களை உரிய தேர்தல் பதிவு அலுவலர்கள் (EROs) அல்லது உதவி தேர்தல் பதிவு அலுவலர்களிடம் (AEROs) சமர்ப்பிப்பது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்கள், வாக்காளர் பட்டியலில் பிழைகள் இல்லாமல், துல்லியமாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்தத் SIR வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்கள் பிப்ரவரி 2026-க்குள் வெளியிடப்படும்.