கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை சார்பில் 'இ சஞ்சீவினி' என்னும் ஆன்லைன் மருத்துவ பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தொடர்பு கொள்ளும் நோயாளிகளுக்கு ஆன்லைனிலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம்(ஜன.,30) பத்தனம்திட்டை மாவட்டம் கோன்னி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த ஓர் பெண் மருத்துவர் எப்பொழுதும் போல ஆன்லைன் மருத்துவ ஆலோசனை பணியில் ஈடுபட்டு சிகிச்சை அளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது திருச்சூரை சேர்ந்த முகம்மது சுகைப் (21) என்னும் வாலிபர் ஆன்லைனில் மருத்துவ ஆலோசனைக்காக ஆன்லைனில் வந்துள்ளார்.
சைபர் க்ரைம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் மருத்துவர்
இந்நிலையில், ஆன்லைனில் வந்த முகம்மது சுகைப் என்னும் வாலிபர் திடீரென தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவர் உடனடியாக அந்த வாலிபரின் ஆன்லைன் இணைப்பை துண்டித்துள்ளார். இதன் பின்னர், இது குறித்து சைபர் க்ரைமில் அந்த பெண் மருத்துவர் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து, ஆரன்முளா காவல் நிலையத்திலும் அப்பெண் மருத்துவர் புகார் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த ஆரன்முளா போலீசார் முகம்மது சுகைப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.