
கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை
செய்தி முன்னோட்டம்
கேரளா:கடந்த 2020ம்ஆண்டு செப்டம்பரில், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் எனும் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19வயது இளம்பெண் ஒருவர் மாற்றுசாதியை சார்ந்த 4பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
படுகாயங்களுடன் அந்த பெண் மீட்கப்பட்ட நிலையில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைதொடர்ந்து அப்பெண்ணின் உடல் உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தினர்.
இதனால் காவல்துறை சார்பிலேயே அப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதுகுறித்த செய்திகளை முழுவதுமாக அறிய அங்கு சென்ற கேரளா பத்திரிகையாளரான சித்திக் கப்பனை உபி போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து சிறையில் சித்திக் கப்பன் கொடுமைப்படுத்தப்படுவதாக அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தார்.
பொய்யான வழக்கு
மீண்டும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் இன்று விடுதலை
கைது செய்யப்பட்ட சித்திக் கப்பன் சிறையில் வழுக்கி விழுந்ததாகவும், கொரோனா காலத்தில் நோய்தொற்று ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிவைத்து உணவளிக்காமல், இயற்கை உபாதைகளை கழிக்கவிடாமல் கொடுமைப்படுத்தியதாகவும் அவரது மனைவி குற்றம்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து பேட்டியெடுக்க சென்றது எப்படி குற்றமாகும் என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
ஆனால் அவர் சட்டத்துக்கு விரோதமாக பணவரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறி அமலாக்கத்துறை அவரை கைதுசெய்தது.
இது மீண்டும் பேசுபொருளாக மாறிய நிலையில், லக்னோ நீதிமன்றம் அவருக்கு இந்த வழக்கில் இருந்து விடுதலை அளித்ததோடு, அவருக்கு ஜாமீன் வழங்கியது.
உபி சிறையிலிருந்து வெளிவந்த சித்திக் குப்பன், 28மாதங்கள் சிறையிருந்து தற்போது விடுதலையாகியிருப்பது மகிழ்ச்சி என்றும் தன்மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என்றும் கூறியுள்ளார்.