கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தேவையான உதவிகள் வழங்குவதாக கனிமொழி உறுதி
கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா(23). இவர் தனது சிறு வயதில் இருந்தே வாகனங்களை ஓட்டுவதில் அதீத ஆர்வம் கொண்டதால் கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக கடந்த மார்ச் மாத இறுதியில் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமானூர் செல்லும் வழித்தடத்தில் தனியார் பேருந்தில் ஓட்டுநர் பணியில் சேர்ந்தார். இவருக்கு பலதரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் இன்று(ஜூன்.,23)காலை திமுக பொது செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி ஷர்மிளாவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சந்தித்து பாராட்டி பேசியுள்ளார். தொடர்ந்து அவரது பேருந்திலேயே ஏறி பீளமேடு வரை ஷர்மிளாவுடன் உரையாடியப்படி பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அதிலிருந்த பெண் நடத்துநர் அன்னதாய் என்பவர் கனிமொழியிடம் பயணசீட்டு வாங்கும்படி அதிகார தோரணையில் கேட்டதாக கூறப்படுகிறது.
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கனிமொழி
அதற்கு ஷர்மிளா அவ்வாறு பேசவேண்டாம் என்று கூறிய நிலையில், கனிமொழியின் உதவியாளர் பணம் கொடுத்து பயணச்சீட்டினை வாங்கியுள்ளார். இதனையடுத்து, கனிமொழி பேருந்தினைவிட்டு இறங்கிய பின்னர், ஷர்மிளா தான் வேலைச்செய்யும் தனியார் பேருந்தின் உரிமையாளரை சந்தித்து அந்த நடத்துநர் குறித்து புகாரளிக்க சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவரோ, "உனது விளம்பரத்திற்காக அனைவரையும் அழைத்து வராதே. யார் பேருந்தில் ஏறினாலும் எனது நடத்துநர் அப்படித்தான் டிக்கெட் கேட்பார்" என்றுக்கூறி வாக்குவாதம் செய்து ஷர்மிளாவை பணியிலிருந்து நீக்கி அவரையும் அவரது தந்தையையும் அவமானப்படுத்தி வெளியே அனுப்பியுள்ளார். இதுகுறித்து அறிந்த கனிமொழி உடனே ஷர்மிளாவை தொலைபேசிமூலம் தொடர்புக்கொண்டு கேட்டறிந்துள்ளார். மேலும் அவருக்கு வேறு வேலை மற்றும் இதர அனைத்து தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.