திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: கந்தசஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
செய்தி முன்னோட்டம்
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. மேலும், இந்த விழாவிற்காக திருச்செந்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சூரசம்ஹாரத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அட்டவணை
விழா அட்டவணை
இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்காக கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். அங்கு அவர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும். தொடர்ந்து கந்தசஷ்டி விழாவின் 7ஆம் நாளான நாளை (அக்டோபர் 28) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலையில் சுவாமி அம்பாளுக்கு காட்சி அளித்தல், மாலை மாற்றும் நிகழ்ச்சி, மற்றும் இரவில் சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.