கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் பருகியதில், 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தினசரி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி, சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபை கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். அவையின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக்கூறி அதிமுகவினரை அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அய்யாவு உத்தரவிட்டார். அதோடு, இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அவர்களுக்கு தடையும் விதித்தார். இதைத்தொடர்ந்து தமிழக ஆளுநரை நேரில் சந்தித்தார் எடப்பாடி கே பழனிசாமி.
ஆளுநரிடம் மனு அளித்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக மனு அளித்தார். அவருடன் அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர். ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கள்ளக்குறிச்சியின் நகரின் மையப்பகுதியில் விஷச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை" எனத் தெரிவித்தார்.