சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவியேற்பு
செய்தி முன்னோட்டம்
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்றார். நேற்று அவரை நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, குடியரசுத் தலைவர் இந்த நியமனத்தைச் செய்துள்ளார். சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இதற்கு முன்னர் கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி
நீதிபதி தர்மாதிகாரியின் பின்னணி
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை பூர்வீகமாக கொண்ட நீதிபதி தர்மாதிகாரி, அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு 2025 ஏப்ரல் முதல் கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். முன்னதாக, பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில், இவரை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்த நீதிபதி ஸ்ரீவஸ்தவா, மார்ச் 5-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து, இன்று மார்ச் 6-ம் தேதி முதல் புதிய தலைமை நீதிபதியாக தர்மாதிகாரியின் நியமனம் நடைமுறைக்கு வருகிறது.