12ஆம் வகுப்பு மாணவர்களே அலெர்ட்; ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2026க்கான விண்ணப்பம் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முதன்மையானப் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ முதன்மைத் தேர்வு (JEE Main) 2026 ஜனவரிப் பதிவிற்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், தேசியத் தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.ac.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2026 ஜனவரிப் பதிவானது, ஜனவரி 21 முதல் 30, 2026 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ஜனவரிப் பதிவு இணைப்பைக் கிளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தை PDF வடிவத்தில் சேமித்து, அதன் அச்சுப் பிரதியை எடுத்து வைத்துக்கொள்வது அவசியம்.
கல்வித் தகுதி
கல்வித் தகுதி மற்றும் ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள், மத்திய அல்லது மாநில கல்வி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட 10+2 அமைப்பின் இறுதித் தேர்வை முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் கூட்டுச் சேவைப் பிரிவின் இரண்டு ஆண்டுப் பாடப்பிரிவின் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம், 10 ஆம் வகுப்புச் சான்றிதழ்/மதிப்பெண் பட்டியல் மற்றும் தேவையான இடங்களில் PwD/PwBD சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். புகைப்படமானது வெள்ளை நிறப் பின்னணியுடன், முகத்தின் 80% தெளிவாகத் தெரியுமாறு இருக்க வேண்டும். ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2026 இன் இரண்டாவது பதிவானது ஏப்ரல் 1 முதல் 10, 2026 வரை நடைபெறும்.