
பாக் என்பது பாகிஸ்தானை குறிப்பிடுகிறதா? மைசூர் பாக் பெயரை மாற்றிய ஜெய்ப்பூர் வணிகர்கள்
செய்தி முன்னோட்டம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூரை இந்தியா தொடங்கிய பிறகு, ஒரு குறியீட்டு நடவடிக்கையாக, ஜெய்ப்பூர் முழுவதும் உள்ள இனிப்பு கடைகள் தங்கள் பெயர்களில் பாக் என்ற வார்த்தையை உள்ளடக்கிய பிரபலமான பாரம்பரிய இனிப்புகளின் பெயர்களை மாற்றத் தொடங்கியுள்ளன.
இதில் பரவலாக அறியப்படும் மைசூர் பாக் பதார்த்தமும் அடங்கும். இந்த மைசூர் பாக்கை தற்போது சில கடைக்காரர்கள் மைசூர் ஸ்ரீ என்று பெயர் மாற்றி விற்கின்றனர்.
சமீபத்திய எல்லை தாண்டிய மோதலைத் தொடர்ந்து தேசிய உணர்வுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பாக் என்ற வார்த்தையை தங்கள் தயாரிப்பு பெயர்களில் இருந்து நீக்க முடிவு செய்ததாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
பாக்
இனிப்பு பெயர்களில் பாக் என்பதன் அர்த்தம்
மைசூர் பாக்கைப் போலவே, மோதி பாக் என்பது மோதி ஸ்ரீ என்றும் கோண்ட் பாக் என்பது கோண்ட் ஸ்ரீ என்றும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த இனிப்புப் பெயர்களில் உள்ள பாக் என்பது இந்திய மொழிகளிலிருந்து, குறிப்பாக கன்னடத்திலிருந்து உருவானது.
இது, இனிப்பு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சர்க்கரை பாகை குறிக்கிறது. ஆனால், பல வாடிக்கையாளர்கள் அதை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தத் தொடங்கியுள்ளதால், ஜெய்ப்பூரில் இந்த பெயர் மாற்றம் அரங்கேறியுள்ளது.
இனிப்புகளின் பெயர் மாற்றங்களுக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் இல்லை என்றாலும், தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் பொது உணர்வு சமையல் மரபுகளில் கூட எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இது உதாரணமாக உள்ளது.