நேரடி சிசிடிவி காட்சி, பாகிஸ்தானுக்கு உளவு! பஞ்சாபில் சிக்கிய ஐஎஸ்ஐ ஏஜென்ட்; அதிர்ச்சி பின்னணி
செய்தி முன்னோட்டம்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட உளவு நெட்வொர்க்கை லூதியானா காவல்துறையும், கவுன்ட்டர்-இண்டெலிஜென்ஸ் பிரிவும் இணைந்து அதிரடியாக முறியடித்துள்ளன. ரகசியத் தகவலின் அடிப்படையில் ஆகஸ்ட் 27 அன்று நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஷ்பால் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களை வெளிநாட்டு உளவு அமைப்பிற்கு வழங்கிய குற்றத்திற்காக அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கண்காணிப்பு
நேரடி சிசிடிவி அணுகல் மூலம் பாதுகாப்பு கண்காணிப்பு
கைது செய்யப்பட்ட ராஷ்பால் சிங், லூதியானா-ஃபிரோஸ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து இயங்கி வந்துள்ளார்.
அந்த கடைக்கு வெளியே சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, அதன் நேரலைக் காட்சிகளை பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ கையாளர்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் அப்பகுதியில் உள்ள பாதுகாப்புப் படைகளின் நகர்வுகளைப் பாகிஸ்தான் உளவுத்துறை தீவிரமாகக் கண்காணித்து வந்ததாக போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறை
சிசிடிவி உபகரணங்கள் பறிமுதல் மற்றும் நீதிமன்றக் காவல்
ராஷ்பால் சிங்கிடமிருந்து 2 சிசிடிவி கேமராக்கள், வைஃபை ரூட்டர், பவர் அடாப்டர் மற்றும் மெமரி கார்டு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சாரபா நகர் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பிய தகவல்களின் வீச்சை அறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி
டெல்லியிலும் கைதான பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள்
பஞ்சாப் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியிலும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பிற்கு உளவு பார்த்த முகம்மது சாஹில் மற்றும் அவரது மனைவி சமீரா ஆகிய இருவரை டெல்லி சிறப்புப் பிரிவினர் ஆகஸ்ட் 28 அன்று கைது செய்தனர்.
தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் இயங்கி வந்த இந்த உளவு அமைப்பை முறியடித்த காவல்துறையினர், ராணுவத் தகவல்கள் கசிந்ததா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தொடர் கைது சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.