ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்?
ஓ.பன்னீர் செல்வம் என்பவர் அதிமுக'வில் ஜெயலலிதாவால் முதலமைச்சராக அமரவைக்கப்பட்டவர். அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். சசிகலாவுடன் போராடி தொண்டர்களை தன்வசப்படுத்தி செல்வாக்கினை பெற்றவர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. எடப்பாடிக்கு சார்பாக அமைந்த தீர்ப்பினையடுத்து ஓபிஎஸ் இனி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி தான் தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்கப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதன் முன்னோட்டமாக தான் திருச்சியில் மாநாடு, சூறாவளி சுற்றுப்பயணம் உள்ளிட்டவைகளுக்கு அவர் தயாராகி வருகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. ஜெயலலிதா அல்லது அம்மா என்னும் பெயர்கள் கொண்டு அவரது புதிய கட்சியின் பெயர் அமைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
4 வாய்ப்புகள் ஓபிஎஸ் முன் இருக்கும் நிலையில் அவர் என்ன செய்ய போகிறார்?
இது ஒரு பக்கம் இருக்க, ஓபிஎஸ் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஓபிஎஸ் அந்த கட்சியில் இணைந்தால் அவருக்கான அங்கீகாரத்தை அளிக்க அக்கட்சியும் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ்'க்கு தேசியளவில் அங்கீகாரம் அளித்து தமிழகத்தில் அவர் மூலம் பா.ஜனதா கட்சியினை முன்னிறுத்தலாம் என்னும் எண்ணத்தில் அக்கட்சி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 3ம் வாய்ப்பாக ஓபிஎஸ் சசிகலாவுடன் இணைந்து எடப்பாடியை எதிர்க்க வாய்ப்பு உள்ளது என்றும் பேசப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இருவருமே தேவைப்பட்டால் நாங்கள் சந்தித்து பேசிக்கொள்வோம் என்று கூறி வருகிறார்கள். மேலும் இது மூன்றும் இல்லாமல் மீண்டும் அதிமுக'வில் எப்படியாவது இணைவது தான் ஓபிஎஸ்'க்கு நல்லது என்றும் அரசியல் வட்டாரங்கள் பேசிவருகிறது.