புதுச்சேரியில் TVK மாநாட்டில் அதிரடி காட்டிய 'சிங்கப் பெண்' இஷா சிங் ஐ.பி.எஸ் டெல்லிக்கு மாற்றம்
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிர்வாகிகளை நேருக்கு நேர் நின்று அதிரடியாகக் கண்டித்த SSP இஷா சிங் IPS, தற்போது டெல்லிக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டு AGMUT கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான இஷா சிங்கை டெல்லிக்கு இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது வழக்கமான நிர்வாக ரீதியிலான இடமாற்றம் என்று கூறப்பட்டாலும், த.வெ.க கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்புக்கு பிறகு இந்த உத்தரவு வந்திருப்பது அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இஷா சிங்குடன் சேர்த்து புதுச்சேரி ஐ.ஜி அஜித்குமார் சிங்க்லா உள்ளிட்ட சில உயரதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விவரங்கள்
யார் இந்த இஷா சிங்?
கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கடுமையான நிபந்தனைகளை விதித்தார். பாஸ் இல்லாத தொண்டர்களை உள்ளே அனுமதிக்க கோரி த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆவேசமடைந்த இஷா சிங்,"காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டாம். அசம்பாவிதம் ஏற்பட்டால் நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். கரூரில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானதை மறந்துவிட்டீர்களா? விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள்" என்று துணிச்சலாக பேசினார்.
வரவேற்பு
சமூக வலைதளங்களில் வரவேற்பு
நிர்வாகிகளை அவர் ஒருமையில் கடிந்துகொண்டதாக ஒரு தரப்பு விமர்சித்தாலும், அவரின் கடமை உணர்வையும் துணிச்சலையும் பலரும் பாராட்டினர். சமூக வலைதளங்களில் 'சிங்கப் பெண்' (Lady Singham) என்று அவர் கொண்டாடப்பட்டார். புதுச்சேரி உள்துறை அமைச்சரும் அவரை நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார். அவர் அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாமல் துணிச்சலுடன் கையாண்ட விதம் இணையவாசிகள் பலரால் பாராட்டப்பட்டது.
தொழில்
IPS அதிகாரியாக இஷா சிங்கின் பயணம்
1998ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இஷா சிங், பொது சேவை மற்றும் செயல்பாடுகளால் உந்தப்பட்ட குடும்பத்தில் வளர்ந்தார். இவரது தந்தையும் ஒரு IPS அதிகாரி. 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான அவரது தந்தை யோகேஷ் பிரதாப் சிங், ஊழலை அம்பலப்படுத்தியதற்காக மீண்டும் மீண்டும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தொடர் பணியிடமாற்றங்களுக்குப் பிறகு ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் அவரது தாயார் அபா சிங், சல்மான் கான் விபத்து உள்ளிட்ட உயர்மட்ட பொது நலன் வழக்குகளை கையாண்ட வழக்கறிஞர் ஆவார். அவரும் பொது சேவை செய்ய இந்திய தபால் சேவையை விட்டு வெளியேறிவர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையில் சேருவதற்கு முன்பு, இஷா சட்டத்தில் தனது அடித்தளத்தை அமைத்தார். பெங்களூரு தேசிய சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார்.