சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(ஏப்ரல்.,18) சென்னையில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சர்பிங் சங்கம், இந்திய சர்பிங் சம்மேளனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் முதன்முறையாக சர்பிங் ஓப்பன் போட்டி நடத்துகிறது. இந்த போட்டியானது மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் விளையாட்டு வளர்ச்சியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறது என்று கூறினார்.
வரும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல நாடு தயாராகி வருகிறது - உதயநிதி ஸ்டாலின்
மேலும், விளையாட்டில் ஏற்படும் வளர்ச்சியானது வளமான பாரம்பரியத்தினை வளர்த்து வருகிறது. சிறந்த தேசிய சர்பிங் சாம்பியன்கள் கொண்டு வரும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல நாடு தயாராகி வருகிறது. சென்னையில் சர்வதேச அளவில் கபடி, கால்பந்து போட்டிகளை நடத்த அந்தந்த மாநில விளையாட்டு சங்கங்களிடம் பேசி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் அவர், இந்த போட்டிக்காக தமிழக அரசு சார்பில் ரூ.2கோடியே 67 லட்சம் காசோலையினை தமிழ்நாடு அலை சறுக்கு போட்டி சங்க தலைவர் அருண்வாசுவிடம் வழங்கினார். இதனையடுத்து அலை சறுக்கு போட்டி சங்க தலைவர் அருண்வாசு கூறுகையில், சர்வதேச சர்பிங் ஓப்பன் போட்டி பல்வேறு பிரிவுகளில் நடக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக 10 வைல்டு கார்டு வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.