பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகள்-குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை
பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரி தொடுக்கப்படும் வழக்குகளை குறித்த காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் குடும்பநல நீதிமன்றத்திற்கு நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ஓர் தம்பதி தனது மகனிடம் இருந்து பராமரிப்பு தொகை பெற்றுத்தருமாறு குடும்பநல நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தொடர்ந்து நிலுவையில் இருந்து வரும் நிலையில், தாய் தந்தையருக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.20,000 வழங்க கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மகன் தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
தம்பதியின் மகன் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி-3 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உத்தரவு
2014ம்ஆண்டு பதியப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். பின்னர், விசாரணை நடந்து முடிந்த நிலையில், இடைக்கால உத்தரவை எதிர்த்து சீராய்வுமனு தாக்கல் செய்ய முடியாது என்றுகூறி அந்த தம்பதியரின் மகன் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகளை குறித்த காலத்தில் விசாரித்து முடிக்க குடும்பநல நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கினை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் தம்பதியர்களின் குழந்தைகள் நலன் கருதி இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடலாம் என்றும் குடும்பநல நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.