பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான நந்தன் நிலகேனி, தான் கல்வி பயின்ற பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார். 1973-ல் பாம்பே ஐஐடியில் இளங்கலை மின் பொறியியல் துறையில் சேர்ந்தார் அவர். பாம்பே ஐஐடியில் தான் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக இந்த நன்கொடையை அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். பாம்பே ஐஐடியில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு உருவாக்குதல் மற்றும் வளர்ந்து வரும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் சார்ந்த ஆராய்ச்சி மையங்களை அமைத்தல் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்காகவும் இந்த நன்கொடையை அளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் நந்தன் நிலகேனி.
"பாம்பே ஐஐடி எனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு படிக்கல்": நிலகேனி
இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து ட்விட்டரிலும் தன்னுடைய கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நிலகேனி. அந்தப் பதிவில் "பாம்பே ஐஐடியானது எனது வாழ்க்கையில் முக்கியமான ஒரு படிக்கல்லாக இருந்திருக்கிறது. தற்போது என்னுடைய பயணத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது அந்த நிறுவனம் தான். அந்த நிறுவனத்துடன் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்னாலான பங்களிப்பை அளித்திருக்கிறேன். இது வெறும் நன்கொடை அல்ல. நமது சமுதாயத்தை மாற்றக்கூடிய மாணவர்களின் மேம்பாட்டுக்காக உழைக்கும் இந்த நிறுவனத்திற்கு நான் வழங்கும் காணிக்கை" எனத் தெரிவித்திருக்கிறார் அவர். பாம்பே ஐஐடிக்கு நிலகேனி அளிக்கும் இந்த நன்கொடைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, அக்கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சுபாசிஷ் சௌத்ரியுடன் இன்று பெங்களூருவில் கையெழுத்தாகியிருக்கிறது.