Loading...
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை! அர்மீனியா, தஜிகிஸ்தான் வரிசையில் மேலும் ஒரு நாடு இணைந்தது
அர்மீனியா, தஜிகிஸ்தான் வரிசையில் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணையை வாங்கியது துருக்மேனிஸ்தான்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை! அர்மீனியா, தஜிகிஸ்தான் வரிசையில் மேலும் ஒரு நாடு இணைந்தது

எழுதியவர் Sekar Chinnappan
Oct 02, 2026
06:59 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் ஆத்மநிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, சர்வதேச அளவில் தனக்கான சந்தையை விரிவுபடுத்தியுள்ளது. அர்மீனியா, தஜிகிஸ்தான் மற்றும் துருக்மேனிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

அர்மீனியா

அர்மீனியாவில் தொடங்கி மத்திய ஆசிய நாடுகள் வரை

ஆகாஷ் ஏவுகணை அமைப்பைக் கொள்முதல் செய்த முதல் வெளிநாடு அர்மீனியா ஆகும்.

அர்மீனியா பல பேட்டரிகளை கொள்முதல் செய்த நிலையில், அதனைத் தொடர்ந்து மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான் மற்றும் துருக்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய மற்றும் சோவியத் காலத்து ராணுவ சாதனங்களை மட்டுமே பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த மத்திய ஆசிய நாடுகள், தற்போது இந்திய தயாரிப்புகளைத் தேர்வு செய்வது இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் திறனுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர்

ஆகாஷ் ஏவுகணையின் தொழில் நுட்பம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் செயல்பாடு

டிஆர்டிஓ அமைப்பால் வடிவமைக்கப்பட்டு, பிடிஎல் மற்றும் பிஇஎல் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ஆகாஷ் ஏவுகணை, ஒரே நேரத்தில் எதிரிகளின் பல வான்வழி இலக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது.

மே 2025-இல் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு நடவடிக்கையின் போது, எதிரிகளின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிப்பதில் ஆகாஷ் ஏவுகணை மிக முக்கியப் பங்காற்றியது.

மேலும், லடாக் உயர் மலைப்பகுதியில் 4,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் சோதனை செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் பதிப்பும் தனது ஆற்றலை நிரூபித்துள்ளது.

ADVERTISEMENT

பாதுகாப்பு ஏற்றுமதி

₹50,000 கோடியை நோக்கி இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி

இந்திய படைப்பிரிவுகளின் தேவைகளை பூர்த்தி செய்தது போக, ஆகாஷ் ஏவுகணையின் உற்பத்தி தற்போது சீரடைந்துள்ளதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், சர்வதேச சந்தையில் குறைந்த உற்பத்தி செலவும் மிகச் சிறந்த தொழில்நுட்பமுமே இந்தியாவின் பலம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி ₹50,000 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், ஆகாஷ் ஏவுகணையின் சர்வதேச வெற்றி இதற்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT