ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் அண்மையில் அருணாசல பிரதேசத்தில் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானியான மேஜர் ஜெயந்த் உள்ளிட்ட 2 இந்திய ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் என்னும் கிராமத்தை சேர்ந்தவராவார். இவருக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகியுள்ளது, இவரது மனைவி பெயர் சாரதா. இவரது மறைவு அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
இந்நிலையில் மேஜர் ஜெயந்த்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விமான நிலையத்தில் கலெக்டர் அனீஷ் சேகர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஜெயந்த்தின் உறவினர்கள், நண்பர்கள், அக்கிரமவாசிகள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதற்கிடையே, லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி உடல் ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த 5 மாதங்களில் மூன்றாவது முறையாக அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.