LOADING...
AC ட்ரெயினில் பயணிக்கும் போது இப்படியா செய்வது? 4 ஆண்டுகளில் இத்தனை லட்சம் துண்டுகள், போர்வைகள் திருட்டா?
4 ஆண்டுகளில் 1.27 கோடி படுக்கை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது

AC ட்ரெயினில் பயணிக்கும் போது இப்படியா செய்வது? 4 ஆண்டுகளில் இத்தனை லட்சம் துண்டுகள், போர்வைகள் திருட்டா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 13, 2026
11:42 am

செய்தி முன்னோட்டம்

இந்திய ரயில்வேயின் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள், பயணிகளாலேயே அதிக அளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு படுக்கை விரிப்பு சேவைகள் முழுமையாக தொடங்கப்பட்ட 2022 ஜனவரி முதல் 2026 மே வரையிலான காலக்கட்டத்தில் மட்டும், சுமார் 1.27 கோடி படுக்கை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ், இந்திய இரயில்வேயின் 69 கோட்டங்களில் நடத்திய RTI விசாரணையின் அடிப்படையில் இந்த தரவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த திருட்டுகளின் காரணமாக படுக்கை விரிப்பு ஒப்பந்ததாரர்களுக்கு சுமார் ரூ.104.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருட்டு

பயணிகளின் 'பேவரைட்' திருட்டுப் பொருள் எது?

மேலும், 2022-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2025-ல் இந்தத் திருட்டு சம்பவங்கள் 56 சதவீதம் அதிகரித்துள்ளது பயணிகளின் பொது ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் பொருட்களில், பைகளில் எளிதாக மறைத்து எடுத்துச் செல்லக்கூடிய முகத் துடைக்கும் சிறிய துண்டுகளையே பயணிகள் அதிக அளவில் திருடியுள்ளனர். முகத் துண்டுகள்: 46.54 லட்சம் படுக்கை விரிப்புகள் (Bedsheets): 41.13 லட்சம் தலையணை உறைகள் (Pillow Covers): 23.59 லட்சம் போர்வைகள் (Blankets): 12.95 லட்சம் தலையணைகள் (Pillows): 2.76 லட்சம் (பையில் வைத்தால் குண்டாகத் தெரியும் என்பதால் இதுவே மிகக் குறைவாகத் திருடப்பட்டுள்ளது).

ரயில்வே கோட்டங்கள்

முதலிடத்தில் இருக்கும் ரயில்வே கோட்டங்கள்

இந்த திருட்டு பட்டியலில் ராஜஸ்தானின் பிகானேர் கோட்டம் 25.76 லட்சம் திருடப்பட்ட பொருட்களுடன் முதலிடத்திலும், ஜார்க்கண்டின் ராஞ்சி கோட்டம் 9.31 லட்சம் பொருட்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக டெல்லி(8.21 லட்சம்), மும்பை(8.17 லட்சம்), ஜோத்பூர்(8.09 லட்சம்), மற்றும் அகமதாபாத் (6.94 லட்சம்) ஆகிய கோட்டங்கள் அதிக இழப்பை சந்தித்துள்ளன. இது குறித்து இரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"ரயில்களில் படுக்கை உபகரணங்களை விநியோகிக்கும் மற்றும் கணக்கெடுக்கும் பொறுப்பு அந்தந்த தனியார் ஒப்பந்த நிறுவனங்களையே சாரும். பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், அதற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை அந்த நிறுவனங்களே ஏற்க வேண்டியுள்ளது. இந்தத் திருட்டுகளைத் தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இரயில்வே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement