LOADING...
ரயில்வே கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது: பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 
ரயில்வே கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது

ரயில்வே கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது: பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Dec 26, 2025
09:18 am

செய்தி முன்னோட்டம்

மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்த புதிய ரயில்வே கட்டண உயர்வு இன்று (டிசம்பர் 26) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ரயில்வேயின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், நிதி நிலைமையைச் சமநிலைப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், குறுகிய தூரப் பயணம் செய்யும் தினசரிப் பயணிகளுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்களில் கூறப்படுகிறது.

புதிய கட்டணம்

சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புதிய கட்டணம்

சாதாரண இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு (Ordinary Class), 215 கிமீ வரையிலான பயணங்களுக்குக் கட்டண உயர்வு ஏதுமில்லை. 216 கிமீ முதல் 750 கிமீ வரையிலான தூரத்திற்கு ரூ.5 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தூரம் அதிகரிக்க அதிகரிக்க, அதிகபட்சமாக ரூ.20 வரை கட்டணம் உயரும். மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பொறுத்தவரை (Mail/Express), ஏசி மற்றும் ஏசி அல்லாத அனைத்து வகுப்புகளுக்கும் கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக, 500 கிமீ பயணத்திற்கு சுமார் ரூ.10 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.

விதிகள்

முக்கிய ரயில்கள் மற்றும் முன்பதிவு விதிகள்

வந்தே பாரத், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, தேஜஸ், அம்ரித் பாரத் மற்றும் கதிமான் போன்ற அனைத்து முன்னணி ரயில்களுக்கும் இந்த புதிய கட்டண உயர்வு பொருந்தும். இன்று (டிசம்பர் 26) முதல் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்தப் புதிய கட்டணம் வசூலிக்கப்படும். இன்றைய தேதிக்கு முன்னதாகவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு, அவர்கள் பயணம் இன்று அல்லது வரும் நாட்களில் இருந்தாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. புறநகர் ரயில்கள் (Suburban Trains) மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கான (Season Tickets) கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement