ஒரே இரவில் மாற்றுவது சாத்தியமில்லை! இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர்
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் கூடுதல் வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இத்தீர்மானம் குறித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியா தானாகவே முன்வந்து தனது எரிசக்தி ஆதாரங்களைப் பல வழிகளில் மாற்றியமைத்துள்ளதாக பாராட்டியுள்ளார். இருப்பினும் ரஷ்யாவிலிருந்து கணிசமான அளவில் எரிபொருளைத் தொடர்ந்து பெற்று வரும் இந்தியாவின் நிலைமையையும் அமெரிக்கா நன்கு புரிந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கால அவகாசம்
60 நாள் அவகாசமும் உலகப் பொருளாதார ஆய்வும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரஹாம் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட சுங்க வரிகளுக்கு 60 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளார்.
இந்த 60 நாள் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் பிற நாடுகளுக்கான வரிகள் உலகப் பொருளாதாரத்தில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்க நிர்வாகம் விரிவாக ஆய்வு செய்யும் என ரூபியோ விளக்கமளித்துள்ளார்.
மேலும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பாடும் விளைவுகளையும் வெள்ளை மாளிகை உன்னிப்பாகக் கண்காணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
எரிசக்தி நெருக்கடி
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிகளும் அமெரிக்காவின் பார்வையும்
மத்திய கிழக்கில் ஈரான் போர் பதற்றங்கள், செங்கடலில் ஹவுதி அமைப்பினரின் தாக்குதல்கள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரினால் எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைவது போன்ற பல காரணங்களால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடும் நெருக்கடிகள் நிலவுகின்றன.
இத்தகைய உலகளாவிய சூழல்களை மனதில் கொண்டே டிரம்ப் நிர்வாகம் இந்தத் தற்காலிக விலக்கு முடிவை எடுத்துள்ளது.
சட்டத்தை இயற்றும் போதே இத்தகைய இக்கட்டான சூழல்களை சமாளிக்க விலக்கு அளிக்கும் அதிகாரம் சேர்க்கப்பட்டிருந்ததாக மார்கோ ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
முதன்மை கூட்டாளி
இந்தியாவை முதன்மையான கூட்டாளியாகக் கருதும் அமெரிக்கா
உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு செல்லும் தனது ஆறு நாள் பயணத்திற்கு முன்னதாக பேசிய மார்கோ ரூபியோ, இந்தியாவை அமெரிக்காவின் மிக முக்கியமான நட்பு நாடு மற்றும் முதன்மையான கூட்டாளி என்று வர்ணித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஒரே நாளில் எரிசக்தி தேவையைத் திருப்புவது நடைமுறையில் மிகவும் கடினமான ஒன்றாகும்.
எனவே தான் இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.