"இந்தியா ஈரானுக்கு துணையாக நிற்கிறது": அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஈரானின் இந்த துயர நேரத்தில் இந்தியா துணை நிற்கும் என்றும் தெரிவித்தார். "ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவர் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது" என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்.
'யாரும் பிழைத்திருப்பதற்கான அறிகுறிகள் இல்லை': ஈரான்
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் பிற அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரில் பயணித்தவர்களிடம் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானின் அரசு ஊடகம் இன்று தெரிவித்துள்ளது. "ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்த பிறகு, ஹெலிகாப்டர் பயணிகள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதிபர் ஒரு அணையை திறந்து வைத்துவிட்டு திரும்பும் வழியில் அவரது ஹெலிகாப்டர், தெஹ்ரானில் இருந்து 600 கி.மீ தொலைவில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்பாவில் விபத்துக்குள்ளானது.