இந்தியாவில் தயாராகும் முதல் புல்லட் ரயில்; எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் தொழில்நுட்ப திறனை உலகிற்கு பறைசாற்றும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் புல்லட் ரயிலின் கட்டமைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வரும் மே 2027-க்குள் தொடங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். குஜராத்தின் வதோதராவில் நடைபெற்ற 'நமோ விகசித் பாரத்' நிகழ்ச்சியில் ரூ.35,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உள்நாட்டு புல்லட் ரயிலின் முதல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் உறுதித்தன்மையை சோதிக்கும் 'Squeeze Test' சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
விவரங்கள்
பயண நேரம் பாதியாகக் குறையும்
மே அல்லது ஜூன் மாதத்திற்குள் இந்த ரயில் தண்டவாளத்தில் இறக்கப்பட்டு சோதிக்கப்படும். சுமார் 2 முதல் 4 மாதங்கள் வரை நடைபெறும் தீவிர சோதனைக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியால் முறைப்படி இது தொடக்கி வைக்கப்படும்.
இந்த ரயில் சேவையின் மூலம் வதோதராவிலிருந்து மும்பைக்கான பயண நேரம் வெறும் 1.5 மணி நேரமாகக் குறையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தில் சூரத் மற்றும் பிலிமோரா இடையிலான முதல் கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், உள்நாட்டு புல்லட் ரயிலின் இந்த அறிவிப்பு இந்திய ரயில்வேயின் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.