இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை
இந்தியாவின் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 2021 ஆம் ஆண்டில் 2,261 சதுர கிலோமீட்டர்கள் அதிகரித்துள்ளது என்றும் ஆந்திரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 8,276 சதுர கிலோமீட்டர் காடுகள் வளர்ந்துள்ளது என்றும் இந்திய மாநில வன அறிக்கை(ISFR)-2021 தெரிவித்துள்ளது. டேராடூனில் உள்ள இந்திய வன ஆய்வின்(FSI), வன வளங்களின் மதிப்பீட்டிற்கான இரு ஆண்டு அறிக்கையை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே வெளியிட்டார். 2019 ஆம் ஆண்டு அறிக்கையுடன் ஒப்பிடுகையில், நாட்டின் மொத்த மரங்கள் மற்றும் காடுகளின் பரப்பளவில் 1,540 சதுர கிலோமீட்டர் காடுகள் மற்றும் 721 சதுர கிலோமீட்டர் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பசுமை இந்தியா மிஷன்
நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும், வனப்பகுதியை அதிகரிக்கவும், காடு வளர்ப்பு மற்றும் மரம் வளர்ப்பு நடவடிக்கைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு உதவுவதற்கு பசுமை இந்தியா மிஷன் போன்ற பல்வேறு மத்திய நிதியுதவி திட்டங்களின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் நிதி உதவி வழங்கி வருகிறது. பசுமை இந்தியாவிற்கான தேசிய மிஷன்(GIM) என்பது காலநிலை மாற்றத்திற்காக எடுக்கப்பட்டிருக்கும் எட்டு தேசிய செயல் திட்டங்களில் ஒன்றாகும். காடு மற்றும் காடு அல்லாத பகுதிகளில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவின் காடுகளை பாதுகாத்தல், மீட்டெடுத்தல், மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பதிலளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.