இந்தியாவில் 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 3,016 கொரோனா பாதிப்பு
நேற்று(மார்-29) 2,151ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 40% உயர்ந்து 3,016ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,016 புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா பதிவுசெய்துள்ள நிலையில், கொரோனா தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது என்று இன்று(மார்-30) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,12,692) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நாட்டின் செயலில் உள்ள கொரோனா 13,509 ஆக உயர்ந்துள்ளது, இது மொத்த தொற்றுநோய்களில் 0.03 சதவீதமாகும். சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, மகாராஷ்டிராவில் 3 இறப்புகளும், டெல்லியில் 2 இறப்புகளும், இமாச்சலில் 1 இறப்பும், கேரளாவில் 8 இறப்புகளும் நேற்று பதிவாகி இருக்கிறது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,862 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,68,321 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 2.7 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 1.71 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.78 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,10,522 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220.65 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 15,784 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.