125 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! 1901க்குப் பிறகு மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம்; வானிலை மையம் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கடந்த 1901 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான தரவுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதமே மிகவும் வெப்பமான மாதமாக அமைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இம்மாடத்தில் நாட்டின் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது வழக்கமாகப் பதிவாகும் இயல்பான சராசரி வெப்பநிலையான 27.34 டிகிரி செல்சியஸை விடப் பெருமளவில் அதிகமாகும்.
இரவு
இரவு நேர வெப்பநிலையும் வரலாற்று உச்சம்
பகல் நேர வெப்பநிலை மட்டுமன்றி, ஆகஸ்ட் மாதத்தின் சராசரி குறைந்தபட்ச (இரவு நேர) வெப்பநிலையும் 1901 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.
வழக்கமான இயல்பான இரவு நேர வெப்பநிலை 23.68 டிகிரி செல்சியஸாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு அது 24.36 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது.
மேலும், இம்மாதத்தில் மழைப்பொழிவு 213.3 மி.மீ ஆகக் குறைந்து, 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான 7வது குறைந்தபட்ச மழைப்பொழிவாகப் பதிவாகியுள்ளது.
மழைப்பொழிவு
மழைப்பொழிவு குறைவிற்கான முக்கியக் காரணங்கள்
இந்த கடும் வெப்பத்திற்கும் மழைப்பொழிவு குறைவிற்கும் எக்குவடோரியல் பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான எல் நினோ சூழலே முதன்மைக் காரணமாகும்.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் 4 குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகி 26 நாட்கள் நீடித்தபோதிலும், அவற்றின் மழைப்பொழிவு பெரும்பாலும் இந்தோ-கங்கைச் சமவெளிப் பகுதிகளில் மட்டுமே செறிவடைந்ததால், நாட்டின் பிற பகுதிகள் மழைப் பற்றாக்குறையைச் சந்தித்தன.
கணிப்பு
செப்டம்பர் மாத மழைப்பொழிவு கணிப்பு
வரவிருக்கும் செப்டம்பர் மாதத்திலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவே (91% LPA-க்கும் குறைவாக) இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான நீண்டகால சராசரி மழை அளவு 167.9 மி.மீ ஆகும்.
வரவிருக்கும் மாதங்களிலும் எல் நினோ தாக்கம் மேலும் வலுவடையும் என்பதால், செப்டம்பரில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.