பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை! இந்திய வான்வெளித் தடையை மே 24 வரை நீட்டித்து அரசு அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியா தனது வான்வெளியைப் பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்துவதற்கு விதித்திருந்த தடையை மே 24, 2026 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தற்போது தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தத் தடையானது பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான விமானங்கள், பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
தடையின் கால அளவு மற்றும் கட்டுப்பாடுகள்
இந்தக் கட்டுப்பாடானது மே 23, 2026 இரவு 23:59 மணி (UTC) வரை நடைமுறையில் இருக்கும், அதாவது இந்திய நேரப்படி மே 24, 2026 காலை 05:30 மணி வரை இந்தத் தடை தொடரும். இந்திய வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு நலன் கருதி, 'நோட்டீஸ் டு ஏர்மென்' (NOTAM) மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் இந்தியா இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்து, ஒவ்வொரு மாதமும் அதன் கால அளவைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
தாக்கம்
வான்வெளித் தடையின் தாக்கம்
இந்தத் தடையால் இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வெளிப் போக்குவரத்து கடந்த ஓராண்டாக முடக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் போது, பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த முடியாமல் மாற்று மற்றும் நீண்ட தூரப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது விமானப் பயணங்களின் கால அளவை அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவையும் பெருமளவு உயர்த்தியுள்ளது. இரு நாடுகளுமே பரஸ்பரம் வான்வெளியைத் தடுத்துள்ளதால், இந்தச் சிக்கல் நீடித்து வருகிறது.