Loading...
11 ஏவுகணைத் தாக்குதல்; சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை 
சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை

11 ஏவுகணைத் தாக்குதல்; சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை 

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2026
08:04 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் வாழும் இந்தியக் குடிமக்கள் உள்ளூர் சட்டங்களை முற்றுமுழுதாக பின்பற்றி மிகவும் கவனமுடன் இருக்குமாறு சவுதியில் உள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது. ஏமனின் ஹூதி அமைப்பினரால் சவுதி அரேபியாவை நோக்கி தொடர்ச்சியாக ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இந்த அவசர பயண வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியர்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தடை விதிப்பு

தாக்குதல் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிரத் தடை

சவுதி வான் பாதுகாப்புப் படையினர் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் காட்சிகளையோ அல்லது இடிபாடுகள் விழுந்த இடங்களையோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வது சவுதி சட்டப்படி கடுமையான குற்றமாகும் என இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சவுதியின் சிவில் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை மேற்கோள்காட்டி பேசுகையில், இத்தகைய தகவல்களைப் பரப்புவோர் மீது சவுதி அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்தியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா விமான சேவை முடக்கம் நீட்டிப்பு

சவுதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக இந்தியாவிற்கும் சவுதிக்கும் இடையே இயக்கப்படும் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமான சேவைகளை நவம்பர் 7, 2026 வரையிலும், ஜித்தாவுக்கான சேவைகளை அக்டோபர் 31, 2026 வரையிலும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவச மாற்றுத் தேதி பதிவு மற்றும் முழுமையான கட்டணத்தைத் திரும்பப் பெறும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

உதவி மையங்கள்

24 மணி நேர உதவி மையங்கள் மற்றும் தூதரகத்தின் நடவடிக்கைகள்

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் சவுதியில் தவிக்கும் இந்தியப் பயணிகளுக்கு உதவுவதற்காக ஜித்தா மற்றும் மெக்காவில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு தேவையான உணவு, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவசர உதவிகளை இந்தியத் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தூதரகம் வழங்கி வருகின்றது.

மேலும், விசா காலாவதி மற்றும் பயணிகள் தாயகம் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் குறித்து சவுதி வெளியுறவு அமைச்சகத்துடன் இந்திய அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT