'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம்
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கை "மிகவும் சார்புடையது" என்றும், மத்திய அரசு அதற்கு "எந்த முக்கியத்துவமும் வழங்காது" என்றும் வெளியுறவு அமைச்சகம் இன்று கூறியுள்ளது. மே 2023 இல் இன மோதல் வெடித்ததைத் தொடர்ந்து மணிப்பூரில் குறிப்பிடத்தக்கமனித உரிமை மீறல்கள் நடந்ததாக அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அது போக, பிரதமர் மோடிக்கு எதிரான ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டதற்கு பிறகு, பிபிசி மீது வரி அதிகாரிகள் நடத்திய சோதனைகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் கொல்லப்பட்ட சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு நாடுகடந்த அடக்குமுறை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரில் குறைந்தது 175 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
மெய்தே மற்றும் குக்கி சமூகங்களுக்கிடையில் நடந்து வரும் மோதல் காரணமாக மணிப்பூரில் குறைந்தது 175 பேர் கொல்லப்பட்டதாகவும் 60,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டு மே மாதம், மெய்தேகளை எஸ்டி பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம்(ATSUM) நடத்திய பழங்குடியின ஒற்றுமை அணிவகுப்புக்குப் பிறகு அம்மாநிலத்தில் வன்முறை வெடித்தது. சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்ற விலை முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனைகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.