LOADING...
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: ஜனவரி 27 இல் அனைத்துக்கட்சி கூட்டம்
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக ஜனவரி 27 இல் அனைத்துக்கட்சி கூட்டம்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: ஜனவரி 27 இல் அனைத்துக்கட்சி கூட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 24, 2026
08:19 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜனவரி 27 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவாதங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். ஜனவரி 28 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

பட்ஜெட்

பிப்ரவரி 1 இல் மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் இதுவாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ள சூழலில், இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கூட்டத்தொடர்

கூட்டத்தொடரின் கால அட்டவணை

பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டம் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும். இரண்டாம் கட்டம் மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும். ஜனவரி 28 அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு பிறகு, பிப்ரவரி 2 முதல் 4 வரை அதன் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து விவாதங்கள் நடைபெறும். இந்தக் கூட்டத்தொடரில் சில முக்கியமான சட்டத் திருத்தங்கள் மற்றும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. விக்சித் பாரத் கல்வி நிறுவன மசோதா 2025 மற்றும் பங்குச் சந்தை குறியீடு மசோதா 2025 ஆகியவை விவாதத்திற்கு வரவுள்ளன. 129 வது அரசியலமைப்புத் திருத்த மசோதா 2024 குறித்தும் விரிவான விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

Advertisement