மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள்
கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே பயணம் செய்வது பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டது. கொரோனா பரவ தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் சில உலக நாடுகளில் தற்போது தான் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அது போன்ற நாடுகளில் பிரான்ஸ் நாடும் ஒன்றாகும். பிரான்ஸில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் மொத்தமாக தளர்த்தப்பட்டுள்ளன. விமானங்களில் செல்ல இருந்த தடைகள், தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை என்று அனைத்து வித கட்டுப்பாடுகளும் அந்நாட்டில் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்
தற்போது தமிழகத்தின் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இப்படி தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தின் மீனவர் பகுதி கடற்கரை குடில்கள், விடுதிகள் மற்றும் ஒத்தவாடை தெருவில் விரும்பி அறை எடுத்து தங்குவதாக கூறப்படுகிறது. ஒத்தவாடை தெரு, கடற்கரை கோவில் தெருவில் புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதற்கே ஒரு கூட்டம் வருவதாகவும் அவர்கள் அங்கிருக்கும் பாசிமணிகளை விரும்பி வாங்குவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் அங்குள்ள கடற்கரை கோவில் ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் கூட்டங்கள் அதிகரித்துள்ளது.