பள்ளிகளைத் தத்தெடுக்கும் 'நம்ம ஸ்கூல்' திட்டம்! - தமிழகப் பள்ளி வளர்ச்சி

தமிழக பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கிண்டி ஐ.டிசி. சோழா ஹோட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவில் இன்று கலந்துகொண்ட தமிழக முதல்வர் இதைத் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி மட்டுமில்லாமல் தமிழ அரசு சார்பாக வகுப்பறைகள் அமைப்பதற்கும் பள்ளிகள் முன்னேற்றத்திற்கும் 800 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும், தமிழக பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகளாக மாற்றுவதற்கே இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று யார் வேண்டுமானாலும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதி வழங்கலாம்.
'நம்ம ஸ்கூல்' திட்டத்தின் நோக்கம்:
பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றை இத்திட்டத்தின் கீழ் சேர்த்து அவர்களிடம் இருந்து சமூகப் பொறுப்புணர்வு நிதி(சி.எஸ்.ஆர்) என்னும் நிதியைப் பெற்று அதன் உதவியுடன் பள்ளிகள் வளர்ச்சி பணிகளை செய்ய அரசு தீர்மானித்துள்ளது. அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே இது. இதில் கிடைக்கும் நிதிகளைக் வைத்து பள்ளிகளின் சுற்றுச்சுவர், கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்றவைக் கட்டப்படும் அல்லது பராமரிக்கப்படும். இதற்காக அறிமுகப்படுத்தப்படும் இணையதளத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம். கொடுக்கப்பட்ட நிதி எதற்கு செலவழிக்கப்பட்டது என்பதையும் அதே இணையதளத்தின் மூலம் கண்காணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.