தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ
இந்தியாவில் 6 முதல் 14 வயதுவரை இலவச கட்டாய கல்வி என்பதை உரிமையாக்கி பிறப்பிக்கப்பட்டது தான் கல்வி உரிமை சட்டம்(ஆர்டிஈ) 2009. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்ட இந்த சட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புகளான மழலையர் வகுப்புகள், ஒன்றாம் வகுப்புகளில் 25சதவிகிதம் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு ஒதுக்கவேண்டும் என்பது விதி. அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு முழுமையாக செலுத்திவிடும். ஒவ்வொரு கல்வியாண்டு துவங்கும் முன்னரும் இந்த பிரிவில் சேர்க்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் பள்ளிகளில் பெறப்படும். ஆண்டுக்கு 2லட்சத்திற்கும் குறைவான வருமானத்தை கொண்ட குடும்பத்தினர் இந்த பிரிவின்கீழ் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி குழந்தைகள், தூய்மை பணியாளர்களின் குழந்தைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை
இதன்படி தமிழ்நாட்டில் 9,000 பள்ளிகளில் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கான இருக்கைகள் இந்த ஆர்டிஈ திட்டத்தின் ஒதுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து 2023-24 கல்வியாண்டிற்கான சேர்க்கை வரும் மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இதில் விண்ணப்பிக்க https://rte.tnschools.gov.in/ என்னும் ஆன்லைன் இணையத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளாக 25 சதவிகித சேர்க்கைக்கான கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், அதற்குள் அடுத்த ஆண்டிற்கான சேர்க்கைக்கு தயாராகி வருவது அதிர்ச்சியளிக்கிறது என்றும் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் கூறியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.