தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள்
தமிழகத்தில் மின் இணைப்பினை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. இது குறித்து கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாளாகும். கடந்த முறை வழங்கியது போல் இம்முறை கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 2.66 கோடி பேர் இணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மீதமுள்ள மின் பயனாளர்களும் இன்றே தங்களது இணைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று மின்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
முன்னதாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்
தமிழகத்தில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, நவம்பர் 15ம் தேதி முதல் 2,811 மின்பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணியை மின் வாரியம் துவங்கியது. முன்னதாக பிப்ரவரி மாத துவக்கத்தில் இது குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது வரை 90.69 சதவிகிதம் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும் மீதமுள்ள 9.31 சதவீதம் பேர் இணைக்கவேண்டியுள்ள காரணத்தினால் இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.