தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ்
தமிழகத்தில் இந்த வாரம் 12ம் வகுப்பு பொது தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வி அதிகாரிகளுடன் இன்று(மார்ச்.,16) தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். கல்வியாளர்களுடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, எதனால் இவ்வளவு மாணவர்கள் பொது தேர்வினை எழுதவில்லை. இதே போல் கடந்தாண்டு நடந்த பொழுது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எல்லாம் ஆலோசனை மேற்கொண்டோம். இனி ஒவ்வொரு தேர்வும் முடிந்த பிறகு 3 மணிக்கு மேல் தேர்வு மையத்தில் இருந்து ஒருவர் வெளியில் சென்று, தேர்வுக்கு வராத மாணவர் குறித்த விவரங்களை ஆராயவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தேர்வுக்கு வராத காரணத்தினை கூறவேண்டும்
மேலும், அவ்வாறு வரும் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல் மாவட்ட வாரியாக மொத்தமாக மாவட்ட ஆட்சியர், பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் ஏன் எழுதவில்லை என காரணம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். வரும் மார்ச் 24ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது, அப்போது அதில் தேர்வுக்கு மாணவர்கள் ஏன் வரவில்லை என காரணம் கூறவேண்டும் என்று கூறினார். தேர்வெழுதாத மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்துவதே எங்களது இலக்கு என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.