புதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் - புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ம்தேதியன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் துவங்கப்பட்டது. இதனைதொடர்ந்து, அம்மாநில முதல்வரும், நிதியமைச்சருமான ரங்கசாமி சட்டமன்றத்தில் இன்று(மார்ச்.,13)முழு பட்ஜெட்டினை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலில் மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம், இலவச மடிக்கணினி, மாலையில் சிறுதானியம் கொண்டு சிற்றுண்டி, முதியோருக்கு ஓய்வூதிய அதிகரிப்பு போன்ற பல அதிரடியான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் மிகமுக்கிய அம்சமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்னும் அறிவிப்பினை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனைதொடர்ந்து அந்த பட்ஜெட் தாக்கலில் சுனாமி நினைவிடம், கடலுக்கடியில் பூங்கா, பிளாஸ்டிக் பொருட்களை நொறுக்கும் கருவிகள் போன்ற பல சிறப்பு அம்சம்கொண்ட அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல்
மேலும், மகளிர் மேம்பாட்டுக்கு 1,330 கோடி ஒதுக்கப்படும், புதுவையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு, புதுவையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்புத்தொகை தேசிய வங்கியில் செலுத்தப்படும், தொற்று நோயை கண்டறிய ஆய்வகம் அமைக்கப்படும். 50 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும், மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் சுற்றுலா நகரம் ஏற்படுத்தக்கூடும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் முடிவு செய்த நிலையில், அதற்காக மாநில திட்டக்குழு கூட்டத்தினை கூட்டி புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தொகையாக ரூ.11,600 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.