பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்
செய்தி முன்னோட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல தசாப்தங்களாக கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இன்று(ஜன 30) கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்க போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து இவர்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கோவிலுக்குள் அழைத்து சென்றார் .
பெற்றோர்-ஆசிரியர் மாநாட்டின் போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஆதிக்க சமூகங்களுடன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இருப்பினும், கிராமத்தில் உள்ள 12 ஆதிக்கக் குழுக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதனால், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, கோயிலுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
ஒடுக்கப்பட்ட மக்களை எதிர்த்து ஆதிக்க சாதியினர் போராட்டம்
தென்முடியனூர் கிராமத்தில் சுமார் 500 பட்டியலின குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு 80 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
கோவிலுக்கு சீல் வைக்கக் கோரி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் கோயிலுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் பல அமைதிக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஆதிக்க சமூகத்தினரை வற்புறுத்தி, பட்டியலினத்தவர்களுக்குக் கோயில் நுழைவை அனுமதிக்க கடும் முயற்சி எடுக்கப்பட்டது.
காவல்துறை திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், பட்டியல் சாதியினர் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு பொங்கல் வைத்து பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.